சனி, 19 பிப்ரவரி, 2011

KULATHTHAAI


"ஈன்ற போலுதிர்ப்பெரிதுவகும் தன் மகனை
சான்றோனென கேட்ட தாய்"
தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமானார்.
இன்று காலை 6:30 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமாகினார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடத்தும் எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்

உறவுகளே வணக்கம்!
தமிழறம் கூறும் உலகை படைக்க ஓயாது உழைக்கும் ஒப்பற்ற தலைவனை எம் தமிழினத்திற்கு தந்த தாயின் ஓவியம் 


இதோ தரவிறக்கம் செய்க

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

PUTHUKKOTTAI MUTHUKUMAR NILAL PADAM

அன்னை தமிழின் அணையா போராளி தோழர் முத்துக்குமார் அவர்களுக்கு போராடு இணைய தளம் தனது வீரவணக்கத்தை சிரம் தாழ்த்தி தெரிவிக்கிறது.


ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம் என்ற தலைவனின் கோட்பாட்டு வழியில் தலைநிமிர்வோம்! தமிழீழம் வெல்வோம்!!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

THIRUPPI ADIPEAN-18


உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!- திருப்பி அடிப்பேன்! - சீமான்! - தொடர்: 18

இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல! புலிக் குட்டி!
''அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து - வரலாற்று அழைப்பில் இருந்து தமிழ் இளம் பரம்பரை ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது!''  - மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன்
இளையான்குடி சந்தையில் மிளகாய் மூட்டைகள் சுமந்துபோட்டு, மணிக்கணக்கில் காத்திருந்தால்... ஆறஅமர வியாபாரி வருவார். முதுகில் தீ வைத்ததுபோல் பற்றிக்கொண்டு எரியும். 'இது சரிஇல்லை... அது சரி இல்லை’ என வியாபாரி அள்ளியதுபோக, எஞ்சிய மிளகாய்களை இறுகக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவேன். கல்லூரி முடித்து, கொஞ்சம் கடனும் நிறையக் கனவுகளுமாகத்தான் இந்தத் தலைநகருக்கு வந்தேன். படங்கள் எடுத்தேன். இன்றைக்கும் அதுவே கதி எனத் தொடர்ந்திருக்கலாம் திரைத் தொழிலை. ஈழத்தில் விழுந்த இழவு என்னை மட்டும்தான் உலுக்கியதா? காப்பாற்றக் கோரிய கதறல் என் காதுகளுக்கு மட்டும்தான் எட்டியதா? கையறு நிலையில் கலங்கிய சோகம் என் கண்களில் மட்டும்தான் நீராக முட்டியதா?
ஈழத்து சாவுக்காக நீயும்தான் துடித்தாய்... நெருப்புக்கு நெஞ்சுகொடுத்த முத்துக்குமாருக்காக நீயும்தான் அழுதாய்... கண்முன்னே கருவறுக்கப்பட்ட துயரத்துக்காக நீயும்தான் நிம்மதி இழந்து புலம்பினாய். உன் முன்னால் நான் வைக்கிற ஒற்றைக் கேள்வி... துடிக்கவைத்த அத்தனை துயரங்களையும் ஒரு துளிக் கண்ணீரோடு இறக்கி வைத்துவிட்டாயா நீ? கனன்று தெறிக்கும் கோபமாக, உன்னுள் இன்னும் உறைந்திருக்கவில்லையா அந்த உக்கிரம்? வாரிக்கொடுத்த துயரத்துக்கு வஞ்சம் தீர்க்கக் காலம் பார்ப்பவனாக நீ காத்திருக்கவில்லையா? எனக்கு இருக்கும் முழுக் கோபமும் உனக்கும் இருக்கிறது. ஆனால், 'என்னால் என்ன செய்ய முடியும்?’ என்கிற தயக்கம் மட்டும்தானே தம்பி உனக்குத் தடை?! தெருவில் இறங்கக் கருவிலேயே கற்றுக்கொண்ட பரம்பரையடா நாம்!
மாணவர்கள் கட்டாயம் அரசியல் அறிவு பெறவேண்டும். அரசியலில் ஈடுபடும் சூழல் வரும்போது, தயங்காமல் நேரடியாகக் களம் இறங்க வேண்டும்!’ என அப்போதே உன்னை அடுத்த கட்ட அரசியலுக்கு ஆயத்தப்படுத்திவிட்டுப் போனான் மாவீரன் பகத்சிங். தூக்குக் கயிற்றையே தோற்கடித்த அந்த வாழைக் குருத்தை நெஞ்சத்து வடிவமாக ஏந்தியிருக்க வேண்டியவன் நீ!
அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கிறார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறார்கள். இன்றைய நிலையில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே புழுத்துப்போய் இருக்கும் இந்த மண்ணில் நாளைய தலைவனாக வடிவெடுக்க வேண்டியவர்கள் இன்றையத் தம்பிகள்தானே? 'அரசியல் ஒரு சாக்கடை’ என யாரோ ஓர் இயலாமைக்காரன் சொன்ன வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருப்பது? உளத்தூய்மையோடு ஒவ்வொருவரும் அரசியலில் அடியெடுத்துவைத்தால், இன்றைய சாக்கடை... நாளைய பூக்கடை!
இறையாண்மை மீறல்’ பாய்ந்து கோவை சிறையில் நானும் அண்ணன் கொளத்தூர் மணியும், பெ.மணியரசன் அய்யாவும் அடை​பட்டுஇருந்த நேரம். 'ஈழத்துக் கோரங்கள் இளைய தலைமுறையின் மனதை உலுக்கவில்லையா?’ என்பதுதான் எங்களைத் துடிக்கவைத்த ஆதங்கம். நாங்கள் வெளியில் வந்த வேளையில்தான் தம்பி முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி உலகத்தையே உலுக்கினான்.
பக்கம் பக்கமாக அவன் அடுக்கி இருந்த ஆதங்கத்தைப் படித்து, 'நம்மோடு நம்மாகத் திரிந்த ஒரு மூர்க்க அறிவாளன் இப்படிக் கருகிவிட்டானே...’ எனக் கதறியதும், 'அவன் விதைத்த தீ, லட்சோப லட்சம் இளைஞர்களைத் திரட்டும்’ எனக் கருதி கண்ணீரை உதறியதும் காலத்திலும் மறக்க முடியாதது. முத்துக்குமாரின் மரணம் பொறுக்காமல் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, 'இனி கவலை இல்லை... அடக்குமுறை வெறி பிடித்த இந்த அரசாங்கத்தால் நம் குரலைத்தான் அடக்க முடியும். இந்தக் கூட்டத்தை என்ன செய்ய முடியும்?’ என நம்பிக்கையோடு நிமிர்ந்தேன்.
ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மாணவர்களின் போராட்டம் பொசுங்கிப்போனது ஏன்? முத்துக்குமாரின் சிதையில் தீயாய்த் திரண்ட மாணவக் கூட்டத்தை 'கால வரையற்ற விடுமுறை’ என்கிற ஒற்றை வார்த்தை சிதைத்தது. பொங்கி வெடித்தவர்கள் விடுமுறை அறிவிப்பைக் கேட்டதும் பொழுதைக் கழிக்கப் போனது ஏன்? 'விடுமுறை’ அறிவிப்பின் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டத்தையே முடக்கிய பெருமை இந்த அரசாங்கத்தையே சேரும்!
இன்றைய மாணவ சமுதாயமும் இளைய தலைமுறையும் கைகோத்து களத்தில் நின்று இருந்தால், நிச்சயம் தமிழ் ஈழம் இத்தனை துயரத்துக்குள் தள்ளப்பட்டு இருக்காது. பிரமிடுகளின் தேசத்தில் இன்றைக்கு வெடித்திருக்கும் பிரளயம் இளைய தலைமுறையின் கொந்தளிப்பால்தான் என்பது தமிழகத் தலைமுறைக்கு மட்டும் புரியாதது ஏன்? புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. 'எது புரட்சி?’ என்கிற கேள்வி தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டபோது, பொட்டில் அடித்தாற்போல் அவர் சொன்னது... 'வெறும் காலோடு நடந்தவன் செருப்பு அணிந்து நடந்தது புரட்சி; அதைச் செய்தவன் புரட்சியாளன்!’ மக்களின் திரட்சியே மாற்று அரசியலுக்கான புரட்சி. அத்தகைய திரட்சியை உருவாக்கவேண்டியவன் இளைஞன்.
தேர்தல் பாதை திருடர் பாதை’ என்கிற சபிப்புகளும், 'என் ஒருவனுடைய ஓட்டுதான் மாற்றத்தை உண்டாக்கப் போகிறதா?’ என்கிற சகிப்புகளும்தான் அரசியல் களம் அசிங்கம் சுமந்து நிற்பதற்கான காரணம். வெறும் 50 சதவிகித வாக்குகள் மட்டுமே இந்தத் தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்றால், 'நாட்டில் என்ன நடந்தால் நமக்கு என்ன?’ என நினைக்கிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டதாகத்தானே அர்த்தம்? உரிமையை வறுமைக்கு விற்கும் ஏழைகளுக்கும், உரிமைகளால் ஒன்றும் ஆகாது எனப் புறக்கணிக்கும் கோழைகளுக்கும் என்ன வித்தியாசம்?
அடி கொடுத்தவனும் - மடி அறுத்தவனும் இங்கே கொடி பிடிக்கிறான். வலை அறுத்தவனும் முலை அறுத்தவனும் இங்கே வசதியாக வந்துபோகிறான். கைகட்டி நின்றவனும், பொய் கொட்டி வென்றவனும் மீண்டும் 'கை’கோத்து நிற்கிறான். கூட்டால் குலை அறுத்தவனை, வாக்குச் சீட்டால் வஞ்சம் தீர்க்கக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது தமிழா! ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொடுத்து, ஆயிரக்கணக்கில் கோடிகள் கொடுத்து தமிழ் ஈழத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு தன்மானத் தமிழன் பதிலடி கொடுக்கும் காலம் இதுதான்.
பீகாரில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி எனச் செய்தி வந்தபோது, 'காங்கிரஸுக்கு ஏன் இந்த இழிநிலை?’ என்கிற கேள்வி எழுந்ததே... அதுபோல், தமிழகத்தில் ஒற்றை இடத்தில்கூட வெல்ல முடியாத அளவுக்கு காங்கிரஸ் வீழ்த்தப்படும்போதும், 'ஏன்?’ என்கிற கேள்வி எழும் அல்லவா? அன்றைக்குச் சொல்வோம்... 'கட்சியைச் சிதைத்ததற்கே இப்படிக் கதறுகிறீர்களே... எங்களின் கருவையே சிதைத்தபோது நாங்கள் எப்படிக் கதறி இருப்போம்?’ என்று! தமிழன், தகிப்பான உமிழன் என்பது வினையாளிகளுக்கும் துணையாளிகளுக்கும் அன்றைக்குத்தானே புரியும்.
இரண்டு முறை என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிய அரசாங்கம் என் மீதான குற்றச்​சாட்டை நிரூபிக்க முடியாமல் தோற்றுப்போனது. காரணம்... உணர்வு மிகுந்தாலும் - உள்ளம் சினந்தாலும் நாம் உண்மை என்கிற நெறியிலேயே நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறோம். அலட்சியப்படுத்தப்படும் கண்ணீர் ஆயிரம் ஆயுதங்களை உற்பத்தி செய்யும். அதை நிகழ்த்தப்போவது நாம்தானடா தம்பிகளே!
தி.மு.க. கூட்டணியில் எத்தனைத் தொகுதிகள் எனத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் காத்திருக்கிறதே... அதைவிட பல மடங்கு ஆவலோடு நான் காத்திருக்கிறேன். காங்கிரஸுக்கான தொகுதிகள் அறுபதாக இருந்தாலும் சரி... நூறாக இருந்தாலும் சரி... அத்தனை தொகுதிகளிலும் என் ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போகும் வரை முழங்குவேன். வாரிக் கொடுத்த கோபத்தில் காறித் துப்பும் தமிழனாக காங்கிரஸை அறைவேன். 'கதரா... கருகிய பதரா?’ எனக் கேட்கிற அளவுக்கு எங்களின் உரு அறுத்த பாவிகளைக் கருவறுப்பேன்.
இந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்!’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை! இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்!
அடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா?’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே?’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது?’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.
அடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது! இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்!’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.
கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா?’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா?
இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!
அலை எழுத்தில் ஓய்ந்தது! எண்ணத்தில் ஓயாது!

THIRUPPI ADIPEAN-17


திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 17


1adippenஎங்கள் அடுத்த தலைமுறைக்குள் 'நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர் வெஞ்சமரை வென்று வீதியெங்கும் முரசறைவர் வேலியன்று போட்டு வெறிநாய்கள் உட்புகுந்து காலில் கடிக்காமல் காவலுக்கு நின்றிருப்பர். பூமரங்கள் பூத்துச் சொரியும் 'புலம்பெயர்ந்த குருவி’யெல்லாம் கூடு திரும்பும் கோயிலெல்லாம் கொடியேறும் நாடு திரும்பி நம் கையில் வந்த​தென்று பாடும் குரலெல்லாம் பரவும்!
- கனவும் களமுமாகப் போராடிய நம் சொந்தங்கள் வல்லாதிக்கப் போரில் வீழ்த்தப்பட்டுவிட்டன. பயங்கரவாதிகளை வென்றுவிட்ட​தாகப் பகபகக்கிறது சிங்களக் கூட்​டம். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து​விட்ட​தாக மார் தட்டுகிறது மன​சாட்சி வேஷம்பூண்ட உலகம். மண் சாட்சி​யாய்ப் போராடிய மறவர்களின் தீரம், சொந்த இனத்துக்கே சரியெனத் தோன்றாமல் போனதுதான் துயரத்தில் துயரம். 'பிரபாகரன் ஒரு 
சர்வாதிகாரி’, 'அரசியல் ரீதியாகப் போராடி இருந்தால், அதிகாரப் பகிர்வைப் பெற்றிருக்கலாம்’, 'பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறார் பிரபாகரன்’, 'ஈழத்தைவைத்து தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள்...’ என ஆதரித்து அரவணைத்து இருக்கவேண்டிய இந்த அன்னை மண் அவலாக மென்று துப்பிய விமர்சனங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. 'ஈழத்தைப்பற்றிப் பேசுவதுதான் சீமானுக்கு வேலை...’ என விமர்சிக்கும் அறிவார்ந்த பெரு​மக்களே... அதைப்பற்றிப் பேசாமல் வேறு எதைப்பற்றிப் பேசுவது? 'சாகும் வரை சாப்பாடு போதும்’ என ஓதும் வேலையை இந்தச் சீமா​னால் செய்ய முடியாது. 12 மைல் தூரத்தில் நடந்த அத்​தனை படுகொலை​களையும் பார்த்துக்​கொண்டு, மூன்று வேளைகளும் மூக்குமுட்ட உண்டுகொண்டு இருந்தோமே... அதைவிடக் கொடூரமானது அந்த மறவர்களை நாம் விமர்சிப்பது!
ஈழ விடுதலை எமது விடுதலை. அது, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான தாயகம். எனது பாட்டன் அருண்மொழித் தேவனும் அவனை அடுத்து வந்த சோழர்​களும் ஏந்திய புலிக் கொடி எமக்கான தேசியக் கொடியாக மாறுகிற மகத்தான வாய்ப்பு. தமிழர் பணம்... தமிழ்த் தேசிய ராணுவம்... தமிழ்த் தேசிய கீதம் என்றெல்லாம் நமக்கான அங்கீ​காரத்தைப் பெறப் புலியாய்ப் போராடியவர்களைப் பழிதூற்றி​யது மட்டும்தானே நம்முடைய இனமானப் பங்களிப்பு?!
ஈழப் போர் உக்கிரமாக நடந்த வேளையில், அதனைத் தடுக்கக் கோரி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைத் துறையினர் போராடினார்கள். அதில் கலந்துகொண்டு மனதில் கொந்தளித்த கருத்துகளை எல்லாம் கொட்டினேன். சூரியத் தொலைக்காட்சியில் அது நேரலையாக ஒளிபரப்பானது. 'இறையாண்மையைக் குலைக்கும் பேச்சு. அதனால், உங்கள் மீது தமிழக அரசு வழக்குப் போடக்கூடும்!’ என என் பேச்சின் அர்த்தங்​களுக்கு அறுவை சிகிச்சை நடத்திக்கொண்டு இருந்தார்​கள் சிலர். அதற்கிடையே என் அலைபேசிக்கு பலரிடம் இருந்தும் அழைப்பு. 'ஈழப் போராட்டம் ஏன் நடக்கிறது என்பதே உங்களுடைய பேச்சைக் கேட்ட பின்னர்தான் புரிந்தது. நாம் நிச்சயம் போராடுவோம்!’ என்றனர் சிலர். நான் சுக்குச்சுக்காக நொறுங்கிப்போன தருணம் அது தமிழர்களே... 12 மைல் தூரத்தில் நடக்கும் 60 ஆண்டு கால சுதந்திரப் போராட்டம் என்னுடைய 20 நிமிடப் பேச்சில்தான் புரிந்தது என்றால், தன் வரலாறு தெரியாத தறுதலை​களின் கூட்டமாகத்தானே தமிழகம் இருந்திருக்கிறது. 'வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது’ என்றார் லெனின். வரலாறு தெரியாத எந்த இனமும் வரலாறு படைக்க முடியாது. ஈழப் போராட்டம் ஏன் தொடங்கியது என்பதே புரியாமல், 'அது தவறு... இது சரி’ எனத் தர்க்கம் பாடுவது தமிழர்களாகிய நமக்கு வழக்கமாகி​விட்டது.
'நாங்கள் அனுசரித்து வாழ்ந்துகொள்கிறோம்’ எனத் தமிழன் காட்டிய பெருந்தன்மையே பெரும் பிழையாகிவிட்டது. மதத் தீவிரவாத நாடாக மருவிய இலங்கை அரசு, தமிழரோ, தமிழ் இஸ்லாமியரோ ஒருபோதும் அதிபராக முடியாது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இலங்கையின் ராணுவத்தில் ஒரு தமிழனுக்கும் இடம் இல்லை என மறுக்கப்பட்டது. 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்கிற நிலை தமிழ் மாணவர்களுக்கு மட்டும் 80 சதவிகிதமாகக் கட்டாயமாக்கப்பட்டது. அப்படியும் தமிழ் மாணவர்கள் கல்வியில் சாதிக்க... அதற்குப் பெரும் காரணமாக இருந்த அறிவுக் கருவூலம் யாழ் பல்கலைக்கழகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அவற்றை எல்லாம் எதிர்த்து தந்தை செல்வா காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எழ... சிங்கள மூர்க்கம் தமிழர்களைத் துவம்சம் செய்யத் தொடங்கியது.
கொதிக்கக் காய்ச்சிய தாரில் தமிழ்க் குழந்தைகளைத் தூக்கிப்போட்டுக் கொன்றது, தமிழச்சிகளின் மார்புகளை அறுத்து சணலில் கோத்து, 'இங்கே மார்புக் கறி கிடைக்கும்’ என எழுதி விற்பனைக்கு வைத்தது, தமிழர்களின் தொடைகளைப் பிளந்து தெருவில் சிதறடித்தது, தமிழ்ப் பெண்களின் மார்புகளில் கொதிக்கக் காய்ச்சிய தாரால் ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்தைப் பதித்தது என சிங்கள வெறியாட்டங்கள் தமிழர்களை உறையவைத்தன. அத்தகைய சூழலில்​தான் எந்த ஆயுதத்தைக் காட்டி அவர்கள் அச்சுறுத்தினார்களோ... அதே ஆயுதத்தால் தன் இனத்தைப் பாதுகாக்க தலைவர் பிரபாகரன் தயாரானார். தந்தை செல்வா காலத்​திலேயே தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலகம் புரிந்துகொண்டு இருந்தால்... பிரபாகரனே உருவாகி இருக்க மாட்டார்.
'ஜெயவர்த்தனே மட்டும் சரியான பௌத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது!’ - தலைவர் பிரபாகரனே சொன்ன வார்த்தைகள் இவை. 'நாட்டுக்காக உயிரைவிடுவது உத்தமம்தான்... ஆனால், உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமே...’ என்பதுதானே புலிகளின் ஆதங்கம். உடனே, 'அது பிரிவினைவாதம்’ எனப் பிளிறுகிறார்களே... ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரிவினைவாதம் என்றால், உலகில் இத்தனை நாடுகள் உதித்தது எப்படி? நார்வேயில் இருந்து சுவீடனும், சேர்பியாவில் இருந்து கொசாவோவும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இருந்து வங்க தேசமும் பிரிந்தது எல்லாமே பிரிவினைவாதமா?
உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பேரன் பேத்தி எடுத்த என் தேசம், தனி ஈழக் கோரிக்கைக்கு மட்டும் தடையாக நிற்பது ஏன்? ஈழ நாட்டை நாம் அடைய நடக்கும் போராட்டம் அல்ல இது... என் எதிரிகள் ஈழத்தை அடைந்து​விடக் கூடாது என்பதற்காக நடக்கும் போராட்டம்! தாயின் மடி தமிழ் ஈழம்... அதில் வேறு ஒருவன் தலை வைப்​பதைத் தடுப்பதற்காகவே அண்ணன் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். அவரைப் பயங்கரவாதியாக இட்டுக்கட்டும் வல்லூறு தேசங்கள், தனிப்பட்ட வாழ்​வியலில் தவறு என ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர் மீது சொல்ல முடியுமா? கண்ணியத்தில் - பெண்ணியத்தில் - களமாடிய புண்ணியத்தில் அந்தத் தகையாளனை விஞ்சக்கூடிய வீரத் தலைவர்கள் எவரேனும் இந்த உலகில் உண்டா?
அவர் கண்களைப் பார்த்த - கணீர் மொழி கேட்ட பெருவரத்தானாகச் சொல்கிறேன்... எத்தகைய இக்கட்டுகள் சூழ்ந்தாலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததற்குக் காரணமே... தாய்த் தமிழ் உறவுகளின் தேசமாக இந்தியா இருப்பதால்தான்!
ஆனால், சிங்கள அரசுடன் நடந்த போரை உலக நாடு​களுக்கு எதிரான போராக மாற்றியதே இந்தியாதான். 'ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரித்து இருந்தால், ஈழப் போரே நடந்திருக்காது’ என இன்று வரை அனுமானம் சொல்பவர்களுக்குச் சொல்கிறேன்... ரணில் இல்லை; ராஜபக்ஷே இல்லை... சிங்கள அதிபராக ஒரு தெரு நாய் தேர்வாகி இருந்தால்கூட நிச்சயம் ஈழத்தை அழிக்கும் போர் அரங்கேற்றப்பட்டு இருக்கும். காரணம்... ஈழப் போரை நடத்தியதே இந்தியாதான்.
'இந்தியாவின் அறிவுரைப்படியே புலிகளைத் தோற்​கடித்தோம்’ என இலங்கை அதிபர் ராஜபக்ஷே நன்றி பாராட்டினாரே... இன்று வரை இந்தியத் தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு உண்டா? 'ஜெயவர்த்தனே 30 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பிழையை நாங்கள் செய்ய​வில்லை. அதனால்தான், போரில் வெற்றி பெற்றோம். ஜெயவர்த்தனே செய்த பிழை, இந்தியாவை நம்பாதது!’ என கோத்தபய ராஜபக்ஷே கொக்கரித்துச் சிரித்தானே... 'எங்களுக்கு என்ன தெரியும்?’ எனக் கையை விரித்த இந்த தேசம், அந்தக் கருத்தை மறுத்ததா?
தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தி வீழ்த்தியவர்கள் அவருடைய குடிமக்க​ளுக்கு ஏற்படுத்திய விடிவு என்ன? சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை சோற்றுக்குக் கையேந்த வைத்ததும்... அதிகாரப் பகிர்வு கேட்டவர்களை அம்மணமாக நிற்கவைத்ததும்தானே!
பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இல்லாத தேசமாக - எல்லாவித சுதந்திரங்களோடும் தன் மக்களை அரணாகக் காத்த அண்ணன் பிரபாகரன் பயங்கரவாதி என்றால், முள்வேலிக்குள் அந்த மக்களை முடக்கிப் போட்டவர்கள்தான் ஜனநாயகவாதிகளா?
அவலக் காட்சியாகவும் அவமானச் சாட்சியாகவும் எம் மக்களை நிறுத்தியதைத் தவிர, தலைவர் பிரபாகரனை வீழ்த்தியதால் விளைந்த மாற்றம்தான் என்ன?
'பண்பாடு பழக்க வழக்கங்களால் வேறு​பட்டு இருக்கும் எங்களை கனடாவில் இருந்து பிரித்துவிடுங்கள்’ எனக் கோரிக்கை வைத்தது க்யூபெக். உடனே, கனடா ஜனநாயக அடிப்படையில் அங்கே வாக்கெடுப்பு நடத்தியது. இரு முறை நடந்த வாக்கெடுப்பிலும் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகவில்லை. உலகக் கட்டப்பஞ்சாயத்துக்காரர்களாக அசுரம் காட்டும் நாடுகள் அத்தகைய வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டியதுதானே? 'ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்கிறீர்களா? இல்லை, தனித் தமிழ் ஈழமாக மீள்கிறீர்களா?’ என்கிற கேள்வியை முன்வைக்க ஜனநாயக சக்திகள் தயாராக இருக்கின்றனவா? இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்குக் காரணம்... மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்குக் காரணம்... மொழி. மதம், இனம், மொழி, பண்பாடு, மரபு என அத்தனையிலும் வேறுபட்டு நிற்கும் ஈழத்தை மட்டும் இலங்கைக்குள் இறுக்குவது எந்த விதத்தில் நியாயம்?
நான் ஈழத்துக்குப் பயணமானபோது, சிங்கள ஓட்டுநர் ஒருவர் அங்கு உள்ளவற்றை விளக்கிச் சொன்னபடி வந்தார். 'இது எங்களின் கோயில்’ என ஓர் இடத்தைக் காட்டினார். 'அங்கே என்ன இருக்கிறது?’ எனக் கேட்​டேன். 'புத்தரின் பல் இருக்கிறது!’ எனச் சொன்னார். புத்தரின் பல்லைப் பத்திரப்படுத்தியவர்கள், அவருடைய சொல்லைப் பத்திரப்படுத்தவில்லையே!
ஆசையை வெறுக்கச் சொன்ன புத்தனின் வார்த்தை​களை அடியற்றி இருந்தால், எத்தனின் தேசமாக இலங்கை இன்று மாறி இருக்காது. 'வெற்றி... வெற்றி...’ எனக் கொக்கரித்த ராஜபக்ஷே, இன்று 'புற்று... புற்று...’ என அலறியபடி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு ஓடு​கிறார். புற்று வருகிறதோ இல்லையோ... புலித் தலைவர் உத்தரவில் உமை வீழ்த்த சீக்கிரமே 'பொட்டு’ வரும்!


THIRUPPI ADIPEAN-16


திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 16


1adippenஆ.ராசா கைது... அடேங்கப்பா... தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?!
லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ் அரசு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளுக்காகக் கொதித்து எழுந்து ஆ.ராசாவைக் கைது  செய்திருக்கிறது.
சரி... கைது நடவடிக்கை பாய்ந்த கண நேரத்திலேயே, 'காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. கூட்டணி உறுதியாகத் தொடர்​கிறது!’ என அறிவிக்கிறது அதே காங்கிரஸ் கட்சி. நாடகம் இயற்றுவதில் கலைஞர் பெருமகனார் கை தேர்ந்தவர். அவருக்கே நாடகம் நடத்திக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி. இறுகிய பிடிக்குள் ராசாவை வைத்துக்​கொண்டு, 'எத்தனை ஸீட்?’ எனக் கேட்கும் காங்கிரஸின் தந்திரம், கலைஞர் பெருமகனாரைத் தத்தளிக்கவைத்து இருக்கிறது. காலம் திரும்புகிறது எனச் சொன்னேனே தம்பிகளே... அது இதுதான்!
ஈழத்துப் படுகொலைகள் இரக்கமற்று நடத்தப்பட்டபோது, 'கலைஞர் அய்யா காப்பாற்றுங்கள்... உங்கள் மந்திரிகளின் பதவிகளை உதறச் சொல்லியாவது, நம் உறவுகளைக் காப்பாற்றுங்கள்...’ எனக் கண்ணீரும் கம்பலையுமாக நாம் கதறிக்கிடந்ததை ஒருகணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள் உறவுகளே... காங்கிரஸ் தலைமைக்குத் தவறியும் நெருக்கடியை உண்டாக்கிவிடக் கூடாது என நினைத்து - ஈழ ஆர்வப் போராட்டங்களின் வீரியத்தை அணைத்து, அத்தனையையும் முடக்கிப்போட்ட முதல்வர் பெருமகனார், இன்றைக்கு தலைநகர் நெருக்கடியால் தடுமாறிக்கிடக்கிறார். நம் குலையறுத்தபோது காங்கிரஸின் முகத்தைக் கண்டு​கொள்ளாமல் இருந்தவர், இன்றைக்கு நிலை வெறுத்துத் தவிக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றைக்குமே தமிழகத்துக்கு எதிராகத்தான் இருந்தது. காங்கிரஸை அடியோடு வீழ்த்தி அரசியல் புரட்சியை அரங்கேற்றிய தி.மு.க., இன்றைக்கு காங்கிரஸால் சிறுகச் சிறுக வீழ்த்தப்படுகிறது. இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள் தங்களின் குணத்துக்குக் குட்டு வாங்கும் நேரம் இது. ஆனாலும், நாடக முடிவில் நல்லதொரு தீர்வுக்கு இரு கட்சிகளும் தயாராகி தமிழகக் களத்தை நோக்கி வந்துவிடுவார்கள். கை கோத்துப் போட்டியிடுவார்கள். கை குலுக்கிப் பிரசாரம் செய்வார்கள். கபட நாடகங்களை அரங்கேற்றுவதில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ராசா கைது ஓர் உதாரணம்தான்!
அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஆ.ராசாவை வளைத்தவர்கள் ஆதர்ஷ் ஊழல் செய்த அசோக் சவானை அப்படியே விட்டுவிட்டார்களே... காமன் வெல்த் ஊழல்வாதிகளின் மேல் கைது நடவடிக்கைகள் பாயவில்லையே... அது என்ன, ஆ.ராசாவுக்கு ஒரு நியாயம்... அசோக் சவானுக்கும் கல்​மாடிக்கும் ஒரு நியாயம்? கேழ்வரகில் நெய் வடியும் கேலிக் கூத்துகளை எல்லாம் நாங்கள் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் காங்கிரஸ்காரர்களே...
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பெரியவர் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தி அம்மையாரும் போட்டியிட்ட நேரம். இருவரில் பெருந்தலைவர் காமராஜர் யாரைக் கை காட்டுகிறாரோ... அவருக்கே தலைவராகும் தகுதி என்கிற நிலை. 'இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில் நீங்களே தலைவராகிவிடலாமே...’ என சிலர் அக்கறையோடு காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்... 'நான் சொன்னா ஜெயிக்கவைப்பாங்க... நின்னா ஜெயிக்கவைக்க மாட்டாங்க...!’ இந்தியத் தேசியம், தமிழன் என்றால் தள்ளிவைத்துத்தான் பார்க்கும் என்பதை அப்போதே பெருந்தலைவர் சூசகமாக சுட்டிக்காட்டியதை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா?
காவிரியில் நமக்கு இருக்கும் உரிமைகளை வலியுறுத்தி, கர்நாடகாவை எதிர்க்கிற தகுதி தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எவருக்காவது இருக்கிறதா? முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் உச்சியை உலுக்கும் சக்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்துக்குத் தலை வணங்கினால் அடுத்த முறையும் கர்நாடகத்தில் வெற்றிபெற முடியாது என்கிற அச்சம்தானே காங்கிரஸை வாய் மூடவைக்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் மூச்சுவிட்டால், கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களே கைகோத்து அந்தக் கட்சிக்கு எதிராகத் திரளுவார்கள் என்பதால்தானே, தமிழகம் திட்டமிட்டுத் தட்டிவைக்கப்படுகிறது?
பக்கத்து மாநிலங்​களுக்குப் பயந்து நீர் ஆதார விவகாரங்களில் அமைதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட மீனவர்களின் வீட்டுக்குக்கூடப் போகாதது ஏன்? சுடப்பட்டும், சுருக்குக் கயிறு வீசப்பட்டும் எங்கள் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு நியாயம் கேட்டால், நிரூபமா ராவை அனுப்பி ராஜபக்ஷேவிடம் கோரிக்கைவைக்கிறது காங்கிரஸ் கட்சி. கொலைகாரர்களிடம் கோரிக்கைவைக்கிற அளவுக்குப் பலகீனமாக இருக்கிறதா இந்தப் பாரதத் திருநாடு?
நிர்வாக ரீதியிலும் இந்தியாவை ஏழை நாடாகவே நீடிக்கவைத்திருக்கும் புண்ணியமும் காங்கிரஸ் கட்சியையே சாரும். விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்தையே உலுக்குகின்றன. பட்டினிக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் ஒரு விவசாயியைப் பற்றி நடிகர் அமீர்கான் 'பீப்ளி லைவ்’ என்கிற படத்தை எடுக்கிறார். பாரதப் பிரதமர் மன்மோகன் அவர்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்... 'நைஸ் ஃபிலிம்!’ தன் ஆட்சியில் நடக்கும் தாங்க முடியா வேதனையைப் பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்த அந்தக் கலைஞனிடம் கண்ணீரை உகுத்து இருக்கவேண்டிய பிரதம மந்திரியின் பேச்சைப் பார்த்தீர்களா?
இந்த ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிற வேதனை காங்கிரஸ் அரசை வெட்கப்படுத்தவில்லையா? '40 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்கிறார்கள்’ என்பதை இந்த அரசாங்கமே அறிக்கையாக வெளியிடுகிறதே... நாளைய வல்லரசின் இன்றைய லட்சணமா இது? அதே நேரம் பல்லாயிரம் டன் எடையிலான உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் மண்ணோடு மண்ணாக மட்கிக்கிடக்கிற கோலத்தை எங்கே போய்ச் சொல்வது?
அது குறித்த ஆதங்கத்தை நீதிமன்றம் எழுப்பியபோது, 'அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’ என அறிவிக்கிறார்கள். அய்யா அறிவார்ந்த பெருமக்களே... எலிகளுக்குக் கொடுக்கும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதானே உங்களின் மக்கள் நல மகத்துவம்?
பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என இன்று வரை இடித்துரைக்கிறது காங்​கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் அதனை இடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதானே... கடப்பாறையும் கம்பியுமாய் வந்தவர்​களைத் தடுக்க சக்தியற்றுப்​போய், டிசம்பர் - 6-ம் தேதியை இந்தியாவின் கறுப்பு தினமாக அறிவிக்கவைத்த அவலத்துக்கு இதே காங்கிரஸ்தானே காரணம்.
மகாத்மா காந்தியடிகளைக் காணச் சென்ற தந்தை பெரியார், 'அய்யா, நம் தேசியக் கொடியும் காங்கிரஸ் கட்சிக் கொடியும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிதான் நாட்டுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது என்கிற குழப்பம் உண்டாகி, மக்கள் அதற்கே வாக்களிப்பார்கள். இது சர்வாதிகார நிலையை உண்டாக்கிவிடும்!’ எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய அபாயம் புரிந்து மகாத்மாவும் காங்கிரஸை உடனடியாகக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரு அதை மறுக்க... பெரியார் உரைத்தபடியே உச்சபட்ச சர்வாதிகார சக்தியாய் இன்றைக்கு காங்கிரஸ் பெருத்து நிற்கிறது.
கைராட்டையைச் சுமந்த காங்கிரஸ் கொடி இன்றைக்கு 'கை’யையும் சோனியாவின் முகத்தையும் சுமந்து பறக்கிறது. இந்திரா காங்கிரஸை உருவாக்கிய இந்திரா காந்தியின் படம்கூட அந்தக் கட்சியின் கொடியில் இல்லை. அப்பனை மறந்த அற்பர் கூட்டம்தான் இன்றைய காங்கிரஸை வளர்த்து வருகிறது. இந்திரா நேருவாக இருந்தவர் பெரோஸ் காந்தியை மணந்ததால்தான் இந்திரா காந்தி என்றானார். இன்றைக்கு நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் நினைவு தினங்களை மறக்காமல் அனுசரிப்பவர்கள் பெரோஸ் காந்தியைப் பற்றி மறந்தும் பேசுவதில்லையே... அது ஏன்?
இன்றைக்கு ராகுல் காந்தியைக்கூட மகாத்மா காந்தியின் பாரம்பரிய வாரிசாக கடைக்கோடி மக்கள் நினைக்கிறார்களே... அந்த நினைப்பை விதைப்பதற்காகவே பெயர் முழுக்க காந்தியை சுமந்து வலம் வருபவர்கள், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்லாமல் புறக்கணிப்பது ஏனய்யா?
சில உள்ளீடான கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்​களிடம் உரிய பதில் இருக்கிறதா? அதெல்லாம் ஏன்... இந்திரா காந்தியின் படத்தையும் சோனியா காந்தியின் படத்தையும் சரிக்குச் சமமாக அச்சிட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவு தொகை சோனியா காந்தியின் சகோதரிக்கு வழங்கப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாரே... அதற்கு இதுவரை மறுப்போ விளக்கமோ வெளிவராதது ஏன்?
நாளைய பிரதமராக தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தியிடம் காவிரி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட... 'நோ காவிரி... நோ இஷ்யூ...’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்கிறபோது எங்களுக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. 'நோ காங்கிரஸ்... நோ ஓட்ஸ்!’
இன்றைக்கு இந்த அளவுக்கு காங்கிரஸை கருவறுக்கத் துடிக்கிறேன் என்றால், அதற்குக் காரணமே தமிழனின் கோபம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைக்கத்தான்! இந்திரா காந்தி இறந்தபோது மூன்று நாட்கள் முழுப் பட்டினியாய் கிடந்து அழுதவன் நான். என் தாத்தா பாட்டியின் சோகம்கூட என்னை அந்த அளவுக்குத் தாக்கியது இல்லை. அத்தகையப் பற்றாளன்தான் இன்றைக்கு அடிபட்ட புலியாகக் கிளம்புகிறேன். என்னை எதிர்கொள்ளும் சக்தி அந்த இறுமாப்புக்காரர்களுக்கு இருக்கிறதா என்பதைத் தேர்தல் களத்தில் பார்ப்போம்!
இன்றைய நெருக்கடிக்காக நிலைகுலைந்​திருக்கும் அய்யா முதல்​வரே... காஞ்சிபுரத்தில் தோற்றுப்​போன​போது அறிஞர் அண்ணா வார்த்தைகளையே உங்களிடம் சொல்கிறேன்...
'ஒரு நெசவாளியைக் கண்டேன்.அவர், 'நான் நீண்ட காலம் காங்கிரஸில் இருப்பவன். அதனால், நான் எப்படி உங்களுக்கு மாற்றிப் போட முடியும்?’ எனக் கேட்டார். 'காங்கிரஸே மாறிவிட்டதே... கொள்கையில், குணத்தில், கண்டவர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கெடுத்துவிட்டார்களே... கெட்டுப்போன பிறகும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடியும் என்கிறீர்களே... அது நியாயமா?’ எனக் கேட்டேன்!’
அதே வார்த்தைகளை நானும் கேட்கிறேன் அய்யா... கெட்டுப்போன பின்பும் ஏனய்யா காங்கிரஸைக் கெட்டியாகப் பிடித்து இருக்கிறீர்கள். கை தூக்கிவிட்ட பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்யச்சொல்லி ஆணையிட்டார் இந்திரா காந்தி. 'முடிந்தால், காமராஜர் மீது கை வைத்துப்பார்’ என சபதம் போட்டீர்கள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த நீங்கள். இந்திரா காந்தியையே இடியாய் குலுக்கிய நீங்கள், சோனியா காந்தியிடம் சுருண்டுபோனது ஏனய்யா?
உங்களின் தலைகீழ் மாற்றத்தைக் காணச்சகிக்​காதவனாகச் சொல்கிறேன்... எதிர்த்தவர்களையே வரலாறு வணங்கும்... உதிர்த்தவர்களை உதிர்த்துவிடும்!


THIRUPPI ADIPEAN-15


திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 15


1adippenநெருப்பு விதையானால் நெருப்பே பயிராகும் இன்னும்தான் கொஞ்சம்கூட எரியாமல் சில பட்ட மரங்கள்! - கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள், வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளைப் புடைக்கவைக்கிறது.
தமிழ் சொர​ணையைச் சுடராக ஏந்திய தம்பி முத்துக்குமாரின் நினைவு தினத்தில், இன்றைய இளைய சமூகத்தை நோக்கிய பார்வை என்னி​டத்தில் பரிதாபமாக நீள்கிறது. தமிழ்ச் சாதியின் தளர்ச்சி பொறுக்காமல் உணர்ச்சியாய் வெடித்து சதையையே விதை​யாக்கிய இளைஞன் அவன். சிறு நெருப்பை மட்டுமே காற்று சிதைக்க முடியும் எனக் கருதி, பெரு நெருப்பாகப் பிரளயம் படைத்தவன். ஈழக் கொலைகளைத் தடுக்க தன் ஈரக்குலையைக் கருக்கியவன். தனி ஒருவன் தணலானால், தமிழகமே தகித்தெழும் என நம்பி தேகத்தை தீக்குத் தின்னக் கொடுத்தவன். 
நம்பிக்கை நரம்பு முறுக்க வேண்டிய இளைஞர் கூட்​டமே... அந்தத் தமிழ் மறவனைப்போல் உன்னை நான் தணலில் குதிக்கச் சொல்லவில்லை. தமிழைத் தணலில் தள்ளி​விடாதே என்பது மட்டுமே உன்னிடம் நான் இறைஞ்சும் கோரிக்கை.
நம்பிக்கை நட்சத்திரங்களாக கல்வியில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் படிப்பு முடித்த 
உடன் வெளிநாட்டு வேலை​களுக்குக் கிளம்புகிறார்களே... அதைத் தவறு எனச் சொல்லித் தடுக்க இந்தத் தாய்த் தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்​விட்டது. விதை பாகி நாற்றங்கால் செழித்த நிலையில், அங்கே வளர்ந்த பயிர் வேறு நிலத்தில் நடப்படும். அப்போது, பயிரை உற்பத்தி செய்த நாற்றங்கால் வெறுமனே கிடக்கும். அந்த நாற்றங்காலைப்போலத்தான் நம் நாடும் வெறுமனே கிடக்கிறது. இங்கே உருவாக்கப்படும் அறிவார்ந்த மூளைகள் அடுத்த நாடுகளில் அல்லவா நடப்படுகிறது. '30 லட்சம், 40 லட்சம் எனப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத்தானே, நாங்கள் படித்தோம். அவற்றைச் சம்பாதிக்க நாங்கள் அடுத்த நாடுகளுக்குத்தானே போக வேண்டி இருக்கிறது?’ என்கிற கேள்வியை இன்றைய இளைய தலைமுறை எழுப்பக்கூடும். தம்பி... நீ கொடுத்த பணம் இந்த நாட்டுக்கோ, இங்கு வாழும் மக்களுக்கோ இல்லை. 'அன்பளிப்பு’ என்கிற பெயரில், கல்லூரி நிர்வாகத்துக்கு நீ வலியக் கொடுத்த வசூல் அது!
வலிக்க வலிக்க உழைத்தவனின் வரிப் பணத்​தில்தான் நீ மருத்துவத்தையும் பொறியியலையும் படித்திருக்கிறாய். எங்களின் பணத்தில் படித்த நீ எங்களின் வலிக்கு ஊசி போடாமல் ஓடுவது நியாய​மாடா தம்பி? 'என் படிப்பு உனக்குப் பங்கு அளிக்காது’ எனச் சொல்லிப் புறக்கணிப்​பவனைக்கூட இந்த தேசம் புகழாரப்​படுத்துகிறது. 'மகன் ஃபாரின்ல டாக்டரா ஒர்க் பண்றார்!’ என வியந்து பேசும் விந்தைத்தனங்கள் இந்தச் செம்மறி ஆட்டுச் சந்தையில் வெகுவாகக் கேட்கிறது. 
கர்ம வீரர் காமராஜரின் ஆட்சி அமைய அப்போது பேருதவியாய் இருந்தார் தந்தை பெரியார். 'நான் என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேன்’ என காமராஜர் கேட்டபோது,. ''நீங்க பெரிசா ஒண்ணும் பண்ண வேணாம்... நம்ம புள்ளைங்களை நல்லபடியாப் படிக்க​வெச்சுடுங்க. அது ஒண்ணு போதும்... அத்தனை விதமான வெளிச்சத்துக்கும்!'' எனச் சொல்லி இருக்கிறார் பெரியார்.
உடை, குறிப்பேடு, புத்தகம் உள்ளிட்ட தேவை​களை இலவசமாக வழங்கிய காமராஜர், இலவச மதிய உணவையும் அறிவித்தார். 'அதற்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்!’ என அதிகாரிகள் அச்சம் தெரிவித்த​போது, 'நிதி இருக்கும் வரை போடுங்க... மற்றபடி தேவைப்​படுவதை நான் மக்களிடம் மடிப் பிச்சை கேட்டு வாங்கித் தருகிறேன்!’ எனச் சொன்னார் காம​ராஜர். எத்தகைய இக்கட்டுக்களைத் தாண்டி கல்வியில் நாம் கரையேறி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால், காசுக்​காக அதனை அந்நிய நாட்டுக்கு கடை விரித்து இருக்க மாட்டோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அந்நிய நாட்டுக் கனவுகளை நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஏந்தி அலைகிறார்களே... அதேபோல் இந்தியக் கனவுகளை எந்த நாட்டுக் குடிமகனும் ஏந்தாதது ஏன்?
படிக்கவே வழியற்றவர்கள் ஒரு பக்கம்... படிப்பை முடித்த உடனேயே பயணப்படுபவர்கள் ஒரு பக்கம்... என இருப்பதால்தான் அடி மடியைச் சுரண்டும் அயோக்​கியத்தனங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அந்நிய நாடுகள் தொழில் தொடங்க அனைத்து சலுகைகளை வழங்கும் இந்த தேசம், சொந்தமாகத் தொழில் தொடங்க கதியற்றுக்கிடக்கிறது. அந்நியத்துக்குப் பச்சைக் கம்பளம் விரித்து சொந்த நாட்டினரைக் கூலி​களாக மாற்றும் இந்தத் தேசம் என்ன பெருமைக்காக 71 ஆயிரம் கோடிக்கு விளையாட்டு விழா நடத்த வேண்டும்? ஆட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தை ஆலைகளுக்கு ஒதுக்கி இருந்தால், எத்தனை பேரின் வாழ்​வாதாரங்களுக்கு வழி பிறந்திருக்கும்? இதற்கிடையில், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வலியக் கொடுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கவும் இந்த தேசம் வெளிநாடுகளிடம் வேண்டுகோள் வைக்கிறது. வல்லாதிக்க நாடுகளின் வர்த்தக மையமாகவும், ஏகபோக முதலாளிகளின் எடுபிடி இடமாகவும் இந்த தேசம் மாறிக்கிடக்கும் கோலத்தைப் படித்த இளைஞர்கள் அல்லவா பதறி அறிய வேண்டும்? சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் பொருந்தாது என்கிற உண்மை என்ன கொடுமை? அங்கே ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தால், இந்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது தெரியுமா? கடலுக்குள் இருக்கும் தீவுகள் நமக்குத் தெரியும். கடனுக்கு முளைத்த தீவுகளாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமாக ஒவ்வொரு தேசமும் இந்த மண்ணில் ஆட்சி நடத்தும் அவலங்கள் எவருடைய கன்னத்தையும் அறையாதது ஏனோ? தேகத்தில் தேமல் விழுந்ததுபோல், இந்தத் தேசத்தில் விழுந்த தேமல்கள்தான் சிறப்புப் பொருளாதார மண்ட​லங்கள். இங்கே மனித உழைப்பு மலிவாகக் கிடைப்ப​தாலேயே வாரிச் சுருட்டும் எண்ணத்தோடு இத்தகைய அந்நியச் சுரண்டல் கூட்டங்கள் அடியெடுத்துவைக்கின்றன. மொத்​தத்தில், அன்றைக்கு இங்கிலாந்துக்கு மட்டுமே அடிமையாக இருந்தோம். இன்றைக்கு எல்லா நாடுகளுக்கும் அடிமையாக இருக்கிறோம்.
கல்வியைக் கற்றவர்களும், பேரறிவைப் பெற்றவர்​களும் இந்த தேசத்திலேயே இருந்து இருந்தால், நம்மை இப்படிக் கொள்ளையடிக்க முடிந்​திருக்குமா? கண் முன்னாலேயே சுரண்டிக் கொழுக்கும் கயமைத்​தனங்கள் நிலை பெற்றிருக்க முடியுமா?
கல்வியும் மருத்துவமும் எட்ட முடியாத இலக்காக இருப்பதாலேயே, இந்தத் தேசத்தில் ஏழை வர்க்கம் எப்படி எல்லாம் திண்டாடிப்போகிறது? வல்லரசாக வடிவெடுக்கும் நாடாக சொல்லப்படும் இங்கே அரசு மருத்துவமனையின் அவலங்கள்கூட தீர்க்கப்படாமலே கிடக்கிறதே. ஏழை ஒருவனின் உயிருக்கு இங்கிருக்கும் மருத்துவங்கள் உதவப்போவது இல்லை என்பது பாரபட்சத்தின் கொடூரம்தானே? அமைச்சர் பெரு​மக்களோ அதிகாரத் துரைமார்களோ ஏதாவது ஓர் அரசு மருத்துவமனையில் எப்போதாவது சிகிச்சை பெற்று இருக்கிறார்களா? அரசு மருத்துவமனையின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது, அப்பாவி மக்​களுக்கு எப்படி அங்கே உரிய சிகிச்சை கிடைக்​கும்?
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த​தாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது ஆச்சர்யமான ஒன்றாகப் பத்திரிகைகளால் அறிவிக்கப்​படுகிறது என்றால், இதர அதிகாரிகள் அரசு மருத்துவ​மனையை எப்படிப் பார்க்​கிறார்கள் என்பது நமக்குப் பொட்டில் அடித்தாற்போல் புரிகிறதே!
கடைசிக் கால உயிரோட்டத்தைக் காப்பாற்ற அரசு மருத்துவமனையின் கட்டிலைக் கட்டிப்பிடித்தபடி காத்துக்கிடந்த அய்யா கக்கனைப்போன்ற அமைச்சர்​களை இன்றைய காலத்தில் எங்கே காண்பது? 'இருந்தால்​தான் மருந்து’ என்கிற நிலையை உடைத்து எறியாத வரை, இங்கே ஏழை உயிருக்கு எந்த உத்திர​வாதமும் இல்லையடா தம்பி.
இதேபோல்தான் கல்வியும்... 'பணம் இருந்தால்தான் படிப்பு’ என்கிற நிலை அரசுப் பள்ளிகளை ஆரம்​பித்த​போதே அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசுப் பள்ளிகளின் நிலை எப்படி இருக்​கிறது? எந்த மாநகரத் தந்தையாவது தன் மகனை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கவைக்கிறாரா? ஏன்... மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்கூட தங்களின் வாரிசுகளைத் தனியார் பள்ளிகளுக்குத்தானே தயார் செய்கிறார்கள். லட்ச லட்சமாய்க் கொட்டிக்​கொடுக்க கதியற்று கண்ணீரில் கதறும் பெற்றோர்களின் நிலை என்​றைக்குத் தீரும்? அன்றைக்குக் கல்வியும் மருத்துவமும், அரசின் கைகளில் இருந்தன. கள்ளுக் கடையும் சாராயக் கடையும், தனியார் கையில் இருந்தன. ஆனால், இன்றைக்கு கல்வியும் மருத்துவமும் தனியார் கையில்... சாராயக் கடை அரசாங்கத்தின் கையில்!
கல்லாதவனும் தேசப் பிடிப்பு இல்லாதவனும் இருப்பதால்தானே ஏழைகளின் நிலை மட்டும் இங்கே இன்னும் இன்னும் இழிவாகிறது. 'நமக்கென்ன’ என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே கெட்டியாய்ப் பிடித்து அலையும் இளைஞர் கூட்டமே... ஒரே ஒரு கணம் தம்பி முத்துக்குமாரின் தியாகத்தை உள்ளுக்குள் உணர்ந்து பார்.
அப்பா, அன்றாடக் கூலிக்காரர். தங்கை, கர்ப்பவதி. வறுமையை மட்டுமே விலாசமாகக்கொண்ட வாடகைக்​குடியில் பிறந்த அவன் எதற்கடா இந்த தேசத்துக்காகத் தீயில் விழ வேண்டும்? ஈழத்தில் இழவு விழுந்தாலும் இல்லத்தில் உணவு வெந்தால் சரி என நினைத்தவர்களுக்கு மத்தியில், அவனுடைய நெஞ்சுக்கூடு மட்டும் ஏனடா தீயை நோக்கித் திரும்ப வேண்டும்? தமிழ்ச் சொந்தங்கள் மீது அவன்கொண்ட பற்றுதானே அப்படிப் பற்றி எரிந்தது. முத்துக்குமாரையும் அவனுக்கு முன்னரே தீயில் விழுந்த அப்துல் ரவூப்பையும் 'இளைஞன்’ வடிவமாக முன்னிறுத்தி, உன் மூச்சுக்குள் மூர்க்கம் பெருக்கு. திரையில் தோன்றியவன் எல்லாம் 'இளைஞன்’ அல்ல... தீயில் தோன்றியவனே இளைஞன்!

THIRUPPI ADIPEAN-14


திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 14


சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர்
சிட்டுக்குருவி பறக்குதே... அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.


இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!
- புதுவையாரின் கவிதை புலன்களை முறுக்குகிறது. வாழக் கதியற்ற ஏழைகளின் வறுமையையே 
வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழக அரசியல் வாழ்ந்து வருகிறதே... மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, சாதியப் பிரச்னைகள், குழந்தைகள் கடத்தல், கல்விக் குளறுபடிகள், தற்கொலைகள் என என்னதான் ஆயிரம் பிரச்னைகள் நிலவினாலும், ஆயிரம் ரூபாய் நோட்டின் மூலம் அனைத்தையும் மறக்கடித்துவிட முடியும் என நினைக்கிறது ஆளும் கட்சி. வாக்குக்குப் பணம் வாங்குவது தவறு என்பது தெரிந்தும், வாழ்க்கையை ஓட்ட வக்கற்ற நிலையால் கையேந்தும் நிலையில்தான் கடைக்கோடி தமிழனும் இருக்கின்றான். வறுமையை தமிழக அரசியல்வாதிகள் வாழவைக்கும் பின்னணி வாக்குகளை விலைக்கு வாங்குவதற்குத்தான்!
ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தால் பலன் அடைபவர்கள் ஒரு கோடியே 88 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்கள் 23 லட்சம் பேர், இலவச தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்கள் ஒரு கோடியே 50 லட்சம் பேர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நலம் பெற்றவர்கள் ஒரு கோடியே 34 லட்சம் பேர்... இன்னும் இன்னும் பல கணக்குகளைப் போட்டு மொத்தமாக பலன் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. கவர்ச்சித் திட்டங்களாலேயே வாக்குகளைக் கவர முடியும் என்பதை உணர்த்துகின்ற கணக்கு இது. 'இதை விதைத்தால் இதை அறுக்கலாம்’ என்கிற வணிக நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு வியாபாரியைப் போல் அரசியல்வாதிகள் இன்றைக்கு இயங்கத் தொடங்கிவிட்டார்கள்.

வயிற்றுக்கு மீன் வழங்க வேண்டியவர்கள் தொண்டை​யைக் குறிவைத்து புழுகோர்க்கப்பட்ட தூண்டிலை வீசுவது வாக்குகளை வளைக்க வேண்டும் என்பதால்தானே! அதற்காகவே, பணத்தை இறைக்கிறார்கள், கவர்ச்சித் திட்டங்களை குவிக்கிறார்கள், தேர்தல் நெருங்க நெருங்க தெருக்கள் தோறும் வலம் வருகிறார்கள். 'இப்படி ஒரு இடம் இருக்கிறதா’ என்பதைக்கூட இத்தனைகாலம் அறியாமல் இருந்தவர்கள் குக்கிராமப் பகுதியிலும் குனிந்து நுழைகிறார்கள். பதவிப் பகட்டுகளில் மிதந்தவர்கள், திடீரென நம்மைத் திரும்பிப் பார்ப்பது ஏன்? கடன் கேட்டாலும் கொடுக்க மறுத்தவர்கள் வலிய வந்து கவர் போட்டு பணத்தை திணிப்பது ஏன்? அலுவலகம் தேடிப்போய் அலைந்து திரிந்தாலும் காண மறுத்தவர்கள் வீடு தேடி வந்து விசனம் விசாரிப்பது ஏன்? வாக்கு என்ற ஒற்றை வார்த்தையை வளைக்கத்தானே இத்தனை கூத்துகளும். பணத்துக்கு உரிமைகளை விற்கும் இந்த இனத்துக்கு என்றைக்கடா தம்பி விழிப்பு வரும்? பாலில் சத்தியம் வாங்கி, தலைப்பிள்ளை உச்சியில் அடித்து, சாமியின் சந்நிதியில் முன்னிறுத்தி பணத்தைக் கொடுத்து, வாக்குக்கு பேரம் பேசும் ஈனத்தனங்களை தமிழன் எப்படியடா தாங்கிக் கொள்கிறான்?
'யப்பா சாமி உனக்கு ஏதப்பா இவ்வளவு பணம், நாத்து பறிச்சியா? சேத்துல உருண்டியா? எங்கிருந்தப்பா சேத்த இவ்வளவு பணத்த? தேடிவந்து பணம் கொடுக்க நீ என் பங்காளியா... அங்காளியா?’ எனக் கொடுக்க வந்தவர்களை உன் கொடுக்கால் கொட்டாதது ஏனடா தமிழா?
அவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதாக சொல்லி உன்னிடம் உள்ள வாக்கை ஊனமாக்குவது தவறில்​லையா தமிழா? கவர்ச்சித் திட்டங்களால் உன்னை மட்டமாக்கியவர்கள் கடைசி நேரப் பணத்தால் உன் சினத்தையும் சிதைக்கிறார்களே... இந்த தேசத்தின் அழுக்கை பொடி பொடியாக்கத்தானடா உன் விரலில் மை வைக்கிறார்கள். ஒரு துளி மையால் மொத்தத்தையும் சுத்தமாக்கும் வாய்ப்பு எப்போதடா வாய்க்கும். பிரியாணி பொட்டலத்தால் உன் வாக்கை பிரிக்கப்பார்ப்பதும், மது புட்டியால் உன்னை மயக்கப் பார்ப்பதும் இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழா தொடரும்?
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பேராவூரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். இன்றைய போக்கின் சக்தியையும் நம் வாக்கின் சக்தியையும் உரக்கச் சொன்னேன். கட்டுக்கடங்காத கூட்டம் கொட்டக்கொட்ட கேட்டது. கூட்டம் முடிந்து திரும்புகையில் கிராமத்துச் சுவடு சுமந்த பெரியவர் ஒருவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு பேசினார். 'நீங்க பேசுறதைக் கேட்கிறப்ப ரத்தமே முறுக்கேறுது தம்பி. நீங்க சொல்ற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போடுற கூட்டம்தான் நாங்க. ஆனா, இந்த தடவை நிச்சயம் பணம் வாங்க மாட்டோம். இருந்தாலும் நாங்க யாருக்குத் தம்பி ஓட்டுப் போடுறது?’ எனக் கேட்டார். பணம் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்ததே ஜனநாயகத்துக்கு கிடைத்த பாதி வெற்றிதான். 'யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாவிட்டாலும் யார் வரக்​கூடாது என்பதை நிச்சயமாக நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதுவே உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும்’ என்று சொன்னேன். அந்தக் கடலோரத் தமிழனிடம் ஏற்பட்ட விழிப்பும் முழிப்பும் கடைக்கோடித் தமிழனுக்கும் ஏற்படும் நாளில் நிச்சயம் இந்த தேசத்துக்கு நிம்மதி பிறக்கும்.
இதில் கொஞ்சமும்  சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், வாக்குப் போடுவதை தேவையற்ற வேலை என்று எண்ணி அதைப் புறக்கணிப்பது. வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது எவ்வளவு மோசமான காரியமோ, அதற்குச் சற்றும் குறையாததுதான், வாக்கு போடாமல் புறக்கணிப்பதும். புறக்கணிக்கவோ, பொழுதைக் கழிக்கவோ நீங்கள் தவறவிட்ட நல்ல வாக்கு எங்கோ ஒரு மூலையில் கள்ளவாக்காக பதிவாகிறதே, அதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? ஒரு தொகுதியில் வெறும் நாலு ஓட்டு மட்டுமே விழுந்தாலும் அதில் மூன்று ஓட்டு வாங்கியவனுக்கு வெற்றி என்று அறிவிப்பதுதான் நம் விசித்திர ஜனநாயகத்தின் வழக்கம். இலங்கையில், வெறும் எட்டு ஓட்டுகள் மட்டுமே வாங்கிய டக்ளஸ் தேவானந்தா அங்கு அமைச்சராக பொறுப்பேற்றது புறக்கணிப்பு காட்டும் மேதாவிகளுக்குப் புரியாதா? 
வறுமை தீரவில்லை என்று சொல்லி பணம் வாங்குபவனுக்கும், பொறுமை இல்லை என்று சொல்லி புறக்கணிப்​பவனுக்கும் என்ன வித்தியாசம்?
இதற்கிடையில், இன்னும் சிலரோ தங்களின் புறக்கணிப்பை பதிவு செய்யும் விதமாக 49ஓ-வுக்கு வாக்களிக்கிறார்கள். அதனால் என்ன பயன் என்பது அந்த அறிவாளிகளுக்கே வெளிச்சம். ஓ போட்டால் எதிரிகள் நமக்கு ஓ போட்டுவிட மாட்டார்களா? ஒரு வாக்கால் ஒரு நாட்டின் போக்கையே மாற்ற முடியும் என்கிற உண்மை புரியாமல் வாக்காளன் இப்படி வாடிக் கிடக்கிறான் என்றால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் அதைவிடப் பரிதாபம். கண்ணுக்கு முன்னே காசுகள் வீசப்படுவது தெரிந்தும் கைகட்டப்பட்ட நிலையில்தான் அதிகாரிகள் அல்லாடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாலேயே அவர்களுக்கு ஆயிரம் விதமான சலுகைகளை வழங்கி ஆதாயம் தேடப்பார்க்கிறது ஆளும்கட்சி. மாற்று மாநில ஆசிரியர் பெருமக்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தினால் ஆளும்கட்சியின் ஆதாய நோக்கை நிச்சயமாக தடுக்க முடியும். உடனே, 'மாற்று மாநிலத்தவர்களால் மொழி புரியாமல் எப்படி பணியாற்ற முடியும்?’ என்ற கேள்வி பாயக்கூடும். மாற்று மாநிலத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் நம் மாநில தேர்தல் ஆணையாளர்களாக பணியாற்றி இருக்கிறார்களே அடையாள அட்டை வைத்து பெயரையும் முகத்தையும் சரிபார்க்க மொழி அறிவு முக்கியமா என்ன?
தேர்தல் ஆணையம் பெரும் கவனம் எடுத்து பரிசீலிக்க வேண்டியது, அடையாள மை குறித்த ஆதங்கத்தைத்தான். அஞ்சு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட பணம் கொடுத்ததற்கு சாட்சியாக ரசீது தருகிறார்கள். ஆனால், விலைமதிக்க முடியாத வாக்கை செலுத்தும் வாக்காளனுக்கு ஒரு துளி மைதான் ரசீதா? வாக்காளர் அடையாள அட்டை போலவே வாக்கை செலுத்தியதற்கு ஆதாயமாக ஒரு அட்டை வழங்கலாமே. மையை அழிக்கக்கூடிய வழிமுறைகளை எல்லாம் கள்ள ஓட்டுக்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா என்ன? முறைகேடுகளை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையம் முடங்கிக் கிடப்பதால்தானே தேர்தல் என்றாலே நமக்கு திருமங்கலம் நினைவு வருகிறது. 'நம் எம்.எல்.ஏ. ஜெயிச்சு நல்லது செய்வாரு’ என நம்பிய காலம் போய், 'நம் எம்.எல்.ஏ. மண்டைய போட்டார்னா தேவலாம்’ என எதிர்பார்க்கிற காலம் உருவாகியது எதனால்? அள்ளி இறைக்கிற கூத்துகளை அதிகாரிகள் தடுக்காததால்! 
தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருக்கிறது தமிழா, உன் கையில் இருக்கிற வாக்கு மிகப்பெரிய கருவி. வாக்காளப் பெருங்குடி மக்களே என வாய் பூரிக்க சொன்னபடி குனிந்த தலையும், கும்பிட்ட கைகளுமாய் உன் வீடு தேடி வருவார்கள். விலை பேசுவார்கள், ஆதரிப்பீர்... வாக்களிப்பீர் என வாக்கு கேட்கும் வார்த்தைகளில் கூட பீர் விற்பார்கள். ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல... காவு!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

KULATHTHAAI

"ஈன்ற போலுதிர்ப்பெரிதுவகும் தன் மகனை
சான்றோனென கேட்ட தாய்"

உறவுகளே வணக்கம்!
தமிழறம் கூறும் உலகை படைக்க ஓயாது உழைக்கும் ஒப்பற்ற தலைவனை எம் தமிழினத்திற்கு தந்த தாயின் ஓவியம் இதோ தரவிறக்கம் செய்க